பறையர்களே தமிழகத்தின் பூர்வ குடிகள் என்பது அனைவரும் அறிந்ததே. கற்றறிந்த பல பேரறிஞர்களின் வாய் மொழியும் , பல வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களும் இதை உறுதிப்படுத்தி இருக்கின்றன . 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகையில் 12% மக்களைக்கொண்ட பேரினமாக நாம் இருக்கின்றோம்.
அரசியல், வணிகம் ஆகிய துறைகளில் சங்க காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும், சுதந்திரத்திற்கு பிறகும் கூட மேம்பட்ட நிலையில் இருந்த நாம், இன்று அனைத்து துறைகளிலும் கீழான நிலையிலேயே இருக்கின்றோம் என்பது மறுக்க முடியாத உண்மை. அன்றாட தேவைகளான கல்வி, குடிநீர், தெருவிளக்கு, சாலைவசதி, சுடுகாடு, போன்ற அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்படும் அவலத்திற்கு ஆளாக்கப்பட்டு நிற்கிறோம். நமக்கான அரசியல் தலைவர்கள் பலர் இருந்தும் இன்னும் இந்த நிலையே நீடிக்கிறது. இந்த நிலையில் இருந்து நாம் மீண்டு எழ பறையர் என்கிற பேரினமாக நாம் ஒன்று கூட வேண்டியது அவசியமாகிறது. நாம் பறையர் என்கிற பேரினமாக ஒன்று திரண்டால் மட்டுமே நம் இனத்திற்கென ஒதுக்கப்படும் நிதியை வேறு துறைகளுக்கு மாற்றாமல் தடுக்க முடியும். நம் இன மக்களுக்காக தமிழக அரசால் மாவட்ட அளவில், அதுவும் பெயரளவில் செயல்படும் குழுக்களை, நமக்காக செயல்பட வைக்க முடியும். இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கும், தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும், அரசிடம் இருந்து அடைப்படை வசதிகளை நாம் பெற்றுக் கொள்வதற்கும், நம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மத்திய, மாநில அரசின் மானியத்துடன் கடன் பெற்று தருவதற்கும், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், அரசு மற்றும் தனியார் துறைகளில் நமக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கும், அரசியல் மற்றும் தொழில் துறைகளில் நம் ஆளுமையை நிலை நாட்டுவதற்கும் , பறையர் பேரின வரலாற்றை நம் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லுவதற்கும் நம் பறையர் சங்கம் துவங்கப் படுகிறது.